Thursday, April 21, 2011
விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வு
விண்வெளியில் நடக்கும் அதிசய நிகழ்வுகளை அடிக்கடி தனது செயற்கைகோள்கள் உதவியுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் புகைப்படமாக வெளியிட்டு வருகிறது. தற்போது, நாசாவின் சூரியமண்டலத்தை ஆய்வு செய்யும் ஆய்வகமான எஸ்.டி.ஒ. ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், சூரியனின் தென்பகுதியில் சூரிய இழை போன்று கிட்டத்தட்ட 4 இலட்சத்து 35 ஆயிரம் மைல்கள் தூரம் சூரியனை சூழ்ந்து ஒளிகற்றை ஒன்று காணப்படுகிறது.
இந்த தொலைவானது பூமியில் இருந்து நிலவிற்கு உண்டான தூரத்தை விட இரு மடங்கு ஆகும். இது சூரியனை விட அதிக அடர்த்தியான நிறத்தினை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு சூரியனை ஒரு பாம்பு சூழ்ந்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிக அடர்த்தி கொண்ட சூரிய இழைகளில் வாயுக்கள் உள்ளன.
இது சூரியனின் வெளி வளிமண்டலம் என அழைக்கப்படும் கரோனா என்ற பகுதியில் இருந்து உருவாகிறது. அறிவியலாளர்கள் கூற்றுப்படி, இந்த புதிய இழை சூரிய புயலை தோற்றுவிக்கும் பலம் வாய்ந்தது அல்லது அது சூரியனுடனேயே மறுபடியும் ஒன்று சேர்ந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்
பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண்
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மருத்துவ துறையில் தற்போது அதிசயிக்கதக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறிய உடல் நல குறைபாடுகள் காரணமாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்து சிலர் தவித்து வருகின்றனர். அவர்களின் குறைபாடுகளை நீக்கி குழந்தை பாக்கியம் பெற டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிறவியிலேயே கரு முட்டை உற்பத்தி செய்ய இயலாத பெண், குழந்தை பெற்று சாதனை படைத்து இருக்கிறார். அவரது பெயர் காரின் திரியாட் (39). பிரான்ஸ் தலைநகர் பாரீசை சேர்ந்தவர். இவரும் ஸ்டீபெய்னி என்பவரும் இரட்டையர்கள், இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களில் ஸ்டிபெய்னி 2 குழந்தைகளை பெற்றெடுத்தார். திரியாட்டுக்கு குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதித்த போது இவருக்கு கரு முட்டை உற்பத்தியாக வில்லை என தெரிய வந்தது. குரோசோம்களின் வளர்ச்சியின்மை காரணமாக இது போன்ற குறைபாடுகள் 2500 பெண்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அவருக்கு கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருடன் இரட்டையராக பிறந்த ஸ்டிபெய்னிடம் இருந்து கருமுட்டை தானம் பெற்று அவரது கருப்பையில் வைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு முறைப்படி மாதவிலக்கு ஏற்பட்டு அவர் கர்ப்பம் அடைந்தார். இதை தொடர்ந்து சரியாக 10-வது மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு விக்டோரியா என பெயரிட்டுள்ளனர்.
தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சையை பெல்ஜியம் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜேக்குவல் டோன்னெஷ் அளித்தார். ஐரோப்பா கண்டத்தில் கரு முட்டை தானம் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண் திரியாட்தான் என அவர் பெருமையுடன் தெரிவித்தார். மேலும் அவரது குழந்தை விக்டோரியாவுக்கு கரு முட்டை உற்பத்தியாவதில் எந்த கோளாறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)