

வங்கதேச திரையரங்குகளில் இந்திய திரைப்படங்களை திரையிடுவது என்று அந்த நாட்டு அரசாங்கம் கடந்த வார இறுதியில் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்குமாறு தாம் அழுத்தம் கொடுத்ததாக வங்கதேச சினிமா நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான வேலைகளை துப்பரவாக ஒழித்துவிடும் என்று அவர்கள் முறையிடுகிறார்கள்.
இது குறித்து அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
ஆனால், இந்தியத் திரைப்படங்கள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட வகையில் கூறியதாக முன்னணி வங்கதேச திரை நட்சத்திரமான ரஷாக் பிபிசியிடம் கூறியுள்ளார்.
ஆகவே இந்திய திரைப்படங்களை கண்டிக்கும் வகையில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வங்கதேச திரையரங்குகள் இந்திய திரைப்படங்களைக் காண்பிக்கத் தொடங்கினால், 25,000 பேர் வேலைகளை இழக்கும் நிலை உருவாகும் என்று திரைப்படத் துறை தலைவர்கள் கூறுகிறார்கள்.
திரையரங்கு ஒன்று
உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறி வங்கதேசத்தில், 1972 களில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், வங்கதேசப்படங்கள் போதிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை என்றும், ரசிகர்கள், திருட்டு வீசிடிக்கள் மூலம், தமது வீடுகளிலேயே இந்தித் திரைப்படங்களை பார்க்கிறார்கள் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆபாசத் திரைப்படங்களை திரையிட்ட திரையரங்குகள் மீது முன்னாள் அரசாங்கம் தடைகளைக் கொண்டுவந்தது. அவற்றில் சில இன்னமும் மீண்டும் திறக்கப்படவில்லை.
திரையரங்குகளுக்கு உதவும் வகையில் இந்திய திரைப்படங்களுக்கான தடை நீக்கப்படும் என்று கடந்த சனிக்கிழமை வணிக அமைச்சர் அறிவித்தார். ஆனால் தற்போதைக்காவது இந்தத்தடை அகற்றப்படாது போலத்தான் தென்படுகிறது என்கிறார் எமது செய்தியாளர்.