நலம் தரும் நவக்கிரக வழிபாடு :
நவக்கிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள். நவகிரகங்களை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
சூரியன்:
சூரியனுக்குரிய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதமிருந்து வணங்க வேண்டும். இதனை ஆதிவிரதமென்றும் கூறுவார்கள். சூரியனுக்கு அதிபதி சிவன் என்பதால் சிவன் கோவில்களில் அர்ச்சனை செய்து வழிபடுவதோடு நவக்கிரக சன்னதியை வலம் வந்து சூரிய பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
என்று தோத்திரம் சொல்லி வணங்க வேண்டும். இவ்வாறு வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோஷமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும்.
செவ்வாய்:
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய் திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குறைபாடுகள் நீங்கும். காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபடுவதோடு நவக்கிரகத்தை வலம் வந்து செவ்வாய் கிரகத்தின் முன்னின்று வழிபட வேண்டும்.
``வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்கினால் மேற்கூறியபடி தோஷநிவாரணம் ஏற்படுவதோடு அம்மனின் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்களும் நீங்கும். வெற்றி கிட்டும். குறிப்பாக இந்த விரதத்தை அனுசரிக்கும் கன்னிப் பெண்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்.
சனீஸ்வரன்:
அஷ்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச்சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்வதால் தொல்லைகள் குறைவதோடு நன்மை உண்டாகும். பெருமாளை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம் வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
"முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்குதல் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுசரிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுசரிக்க வேண்டும்.
சுக்கிரன்:
இவ்விரதத்தை சுக்கிரவார விரதமென்றும் கூறுவார்கள். அம்பாளையும் முருகனையும் வணங்கி விரதம் அனுசரிக்கப்பட வேண்டும். சிலர் அவர்களது இஷ்டதெய்வங்களை வணங்கி மேற்கொள்வதுமுண்டு. நவக்கிரக சந்நிதியை வலம் வந்து சுக்கிர பகவானை வணங்க வேண்டும்.
அப்போது
"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம்
ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''
என்ற தோத்திரத்தைப் பாடி வணங்குவதனால் புகழ், செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.
கேது பகவான்:
கேது விரதம் அனுசரிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வணங்கி பின்னர் நவக்கிரக சந்நிதியை வழிபட்டு கேது பகவானை வணங்க வேண்டும்.
"பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம் பொருட்டால்
ஆழி, தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!"
என்று தோத்திரம் சொல்லி வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும்.
சந்திரன்:
சந்திரதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுசரித்தால் தோஷம் நீங்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று வழிபட வேண்டும்.
"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி''
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள்.
புதன்:
புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் அனைவரும் அனுசரிக்கலாம். புதன்கிழமை அன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி புதன் பகவான் முன் வழிபட வேண்டும்.
"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''
என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும் பொருந்தி வரும் என்று கூறப்படுகிறது.
குரு:
குரு தோஷமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வியாழ பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக் கரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி''
என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்வதன் பலனாக நல்வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ராகு பகவான்:
ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். காளி கோவிலுக்குச் சென்று வேப்பெண்ணெய் விளக்கேற்றி நவக்கிரக சந்நிதியில் ராகு பகவானை வழிபட வேண்டும்.
"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!''
என்ற தோத்திரம் பாடி வணங்குவதால் சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.
நன்றி : மாலைமலர் - ஆன்மிகம்
Monday, October 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment